ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்: துடைப்பத்தை மறைக்க முடியாமல் திணறும் தேர்தல் அதிகாரிகள்

தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் போன்ற வடிவமைப்பு கொண்ட பொருட்களை பொது இடங்களில் தேர்தல் அதிகாரிகள் மறைத்துள்ளனர்.;

Update:2023-05-04 04:00 IST

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, ஆம் ஆத்மி உள்பட ஏராளமான கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஏற்கனவே சின்னங்கள் உள்ளன. அதுபோல் சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மின்விசிறி, மேஜை உள்ளிட்ட சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை சின்னமாக ஒதுக்கி உள்ளது. இதில் துடைப்பம், ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் ஆகும்.

இந்த நிலையில் தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் போன்ற வடிவமைப்பு கொண்ட பொருட்களை பொது இடங்களில் தேர்தல் அதிகாரிகள் மறைத்துள்ளனர். ஆனால் பொது இடங்களிலும், வீடுகளிலும் அன்றாடம் துடைப்பம், மின்விசிறி போன்றவற்றை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக துடைப்பம் அரசு அலுவலகங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் பயன்படுகிறது. துப்புரவு பணியாளர்கள் துடைப்பத்துடனேயே வலம் வருகிறார்கள்.

இதனால் அதை கட்டுப்படுத்த முடியாமல் தேர்தல் அதிகாரிகள் திணறுகிறார்கள். இதே பிரச்சினை ஓட்டுப்பதிவு நாளன்றும் வாக்குச்சாவடிகளில் தலைதூக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது வாக்குச்சாவடிகளில் துடைப்பம், மின்விசிறி போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்துவார்கள்.

இது அங்கு வரும் வாக்காளர்களை திசை திருப்ப வாய்ப்புண்டு என்று கருதப்படுகிறது. இதனால் வாக்குச்சாவடிகளில் அவற்றை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டி இப்போதே தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்