காதல் தோல்வியால் ரெயில் முன்பு பாய்ந்து இளம்பெண் தற்கொலை
காதல் ஜோடி இடையே ஏற்பட்ட தகராறில் அவர்கள் பிரிந்து விட்டனர்.
பெங்களூரு,
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் லிகிதா ஜாஸ்மின் (வயது 24). லிகிதா, பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் காதல் ஜோடி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் பிரிந்து விட்டனர். இதன் காரணமாக லிகிதா மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து லிகிதா பெங்களூருவில் வசித்து வந்த அவரது சகோதரி கிருத்திகா வீட்டிற்கு சென்றார். லிகிதாவை கிருத்திகா சமாதானம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று லிகிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டை விட்டு வெளியேறிய லிகிதா, சோழதேவனஹள்ளி ரெயில் நிலையத்துக்கு சென்று ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் லிகிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.