திருமணம் நிச்சயமான பெண்ணை காதலித்த வாலிபர் கொலை

பெலகாவியில் திருமணம் நிச்சயமான பெண்ணை காதலித்த வாலிபரை கொலை செய்த வழக்கில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-28 21:06 GMT

பெலகாவி:

வாலிபர் கொலை

பெலகாவி மாவட்டம் கோகாக் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திங்களாபுரா கால்வாய் பகுதியில் கடந்த 12-ந் தேதி உடலில் மின்கம்பம் கட்டியபடி ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி கோகாக் போலீசார் விசாரித்தனர். முதலில் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது.

வாலிபரின் கையில் இருந்த டாட்டூ மூலமாக, அந்த வாலிபர் கோகாக் அருகே வசித்து வந்த சோமலிங்கா கம்பாரா(வயது 22) என்று அடையாளம் காணப்பட்டது. அவர், கடந்த 8-ந் தேதியே காணாமல் போனது பற்றிய தகவல்களும் போலீசாருக்கு கிடைத்தது. பின்னர் சோமலிங்கா கடைசியாக யாருடன் பேசி இருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்தார்கள்.

புதுமாப்பிள்ளை கைது

அப்போது கட்டபிரபாவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன், சோமலிங்கா பேசியது தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சோமலிங்காவை தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட சிவலிங்காவும், தனது சித்தப்பாவான சந்தோஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து தீர்த்து கட்டியதாக போலீசாரிடம் இளம்பெண் கூறினார்.

இதையடுத்து, சிவலிங்கா, சந்தோசை கோகாக் போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

நிச்சயமான பெண்ணுடன் காதல்

அதாவது சிவலிங்காவுக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. ஆனாலும் இளம்பெண்ணை சோமலிங்கா காதலித்துள்ளார். வேறு ஒரு இளம்பெண்ணுடனும் அவர் பழகி வந்திருக்கிறார். தனக்கு நிச்சயமான பெண்ணை சோமலிங்கா காதலிப்பது பற்றி அறிந்த சிவலிங்கா, சந்தோசுடன் சேர்ந்து சோமலிங்காவை கொலை செய்ய திட்டமிட்டார். பின்னர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தனியாக இருப்பதாகவும், அங்கு வரும்படியும் இளம்பெண் சோமலிங்காவை செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.

அதன்படி, இளம்பெண் வீட்டுக்கு சென்ற சோமலிங்காவின் கழுத்தை நெரித்து சிவலிங்கா, சந்தோஷ் கொலை செய்திருந்தார்கள். பின்னர் அவரது உடலில், முறிந்து கிடந்த மின்கம்ப துண்டுகளை கட்டி கட்டபிரபா ஆற்றில் வீசி இருந்தார்கள். அத்துடன் சோமலிங்காவின் செல்போனில், அவர் வேறு ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் புகைப்படமும் இருந்தது. அந்த புகைப்படத்தை சோமலிங்காவின் வாட்ஸ்-அப்பில் முகப்பு படமாக வைத்துவிட்டு, செல்போனை பெங்களூரு-மீரஜ் ரெயிலில் வீசியது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

அதாவது அந்த பெண்ணின் உறவினர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் வாட்ஸ்-அப்பில் முகப்பு படத்தை மாற்றியதாக போலீசாரிடம் சிவலிங்கா, சந்தோஷ் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் சோமலிங்காவை கடைசியாக இளம்பெண் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால், போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள். கைதான 2 பேரும் விசாரணைக்கு பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்