மனைவியுடனான கள்ளக்காதலை கண்டித்த தொழிலாளி படுகொலை

மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறி கண்டித்த தொழிலாளியை படுகொலை செய்த சம்பவம் தாவணகெரேவில் நடந்துள்ளது. இதுதொடர்பாக அந்த தொழிலாளியின் நண்பன் போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2023-03-01 18:45 GMT

சிக்கமகளூரு:-

கட்டிட தொழிலாளிகள்

தாவணகெரே மாவட்டம் கப்பூர்பசப்பா தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 29). இவரது நண்பர் ராகேஷ்(26). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள் ஆவர். இதில் பிரசாந்துக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் பிரசாந்தின் வீட்டுக்கு ராகேஷ் அடிக்கடி சென்று வந்தார். அதன்மூலம் பிரசாந்தின் மனைவிக்கும், ராகேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

வாட்ஸ்-அப் மூலம்...

மேலும் இருவரும் செல்போன்களில் வாட்ஸ்-அப் மூலம் பேசி வந்தனர். இந்த நிலையில் தனது மனைவியின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் ராகேஷ் அனுப்பியிருந்த குறந்தகவல்களைப் பார்த்து பிரசாந்த் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இருவரையும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி கண்டித்தார். மேலும் பெரியோர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தையும் நடந்தது.

அதுமட்டுமின்றி பிரசாத் மனவேதனையில் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்தார். அவரை குடும்பத்தினர் காப்பாற்றினர். பின்னர் ராகேசை அழைத்த பிரசாந்தின் குடும்பத்தினர், இனிமேல் பிரசாந்தின் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட்டு விட வேண்டும், அவளுக்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல்கள் அனுப்பக்கூடாது, மேலும் எந்தவொரு தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று எச்சரித்தனர்.

உருட்டு கட்டையால் தாக்கி கொலை

அதை ஏற்றுக்கொண்டு ராகேசும் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் ராகேஷ், மீண்டும் பிரசாந்தின் மனைவிக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல்கள் அனுப்பி வந்தார். இதுபற்றி அறிந்த பிரசாந்த் ஆத்திரம் அடைந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரசாந்த், ராகேசை சந்தித்து மீண்டும் எச்சரிக்கை விடுத்தார். தனது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி கூறினார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கிராமத்தின் எல்லைப்பகுதிக்கு சென்ற அவர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது கடும் கோபமடைந்த ராகேஷ், உருட்டு கட்டையால் பிரசாந்தை சரமாரியாக தாக்கினார்.அதில் படுகாயம் அடைந்த பிரசாந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசில் சரண்

இதுபற்றி அப்பகுதி மக்கள் ஆர்.எம்.சி. யார்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆர்.எம்.சி. யார்டு போலீஸ் நிலையத்தில் ராகேஷ் சரண் அடைந்தார்.

அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்