செல்பி எடுத்தபோது திடீரென வந்த ரெயில்... 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி - அதிர்ச்சி காட்சிகள்
ரெயிலின் மீது மோதுவதை விட கீழே குதித்துவிடலாம் என எண்ணிய அவர்கள், 90 அடி பள்ளத்தில் கீழே குதித்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல்மேவாடா. இவர் தனது மனைவி ஜான்வியுடன் கோரம்காட்டில் உள்ள ரெயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். தம்பதியின் அருகில் இருந்தவர்களும் அங்குள்ள அழகிய காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பாலத்தின் அருகே ரெயில் வந்துகொண்டிருந்தது. ரெயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த தம்பதிக்கு விலகி நிற்கவோ, மறுமுனையை அடையவோ நேரம் இல்லை. இதனை அறிந்த தம்பதி, ரெயிலின் மீது மோதுவதை விட கீழே குதித்துவிடலாம் என எண்ணி 90 அடி பள்ளத்தில் கீழே குதித்தனர்.
இதை கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். தண்டவாளத்தில் ஆட்கள் நிற்பதை அறிந்த ஓட்டுநர், உடனடியாக அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரெயிலை உடனடியாக நிறுத்தினார். எனினும், உயிர் பயத்தில் கீழே விழுந்ததில் இருவருக்கும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ராகுலின் உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நேரத்தில் ஜான்விக்கு கால் முறிவு ஏற்பட்டதுடன், முதுகுத்தண்டு பகுதியிலும் காயம் ஏற்பட்டது. அவர் பாலியில் உள்ள பங்கார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கவும், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.