மும்பையில் இருந்து கோரக்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயங்கர தீ

ரெயில் நின்றவுடன் சில பயணிகள் பதற்றத்தில் கீழே குதித்து ஓடினர்.

Update: 2024-03-22 20:02 GMT

மும்பை,

மும்பை லோக்மான்யா திலக் டெர்மினசில் (எல்.டி.டி.) இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு நேற்று காலை 10.55 மணி அளவில் கோதான் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் நேற்று பிற்பகல் 2.43 மணிக்கு நாசிக் ரோடு ரெயில் நிலையம் வந்தடைந்தது. 4 நிமிடங்களுக்கு பிறகு ரெயில் அங்கு இருந்து புறப்பட்டது.

நாசிக் ரோடு - கோரேவாடி ரெயில் நிலையம் இடையே உள்ள நாசிக் மாநகராட்சி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடந்தபோது, ரெயிலின் பயணிகள்- சரக்கு ஒருங்கிணைந்த பெட்டியில் தீப்பிடித்து அதில் இருந்து புகை வந்தது. புகை வந்தவுடன் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரெயில் கார்டு உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் சில பயணிகள் பதற்றத்தில் கீழே குதித்து ஓடினர்.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் வருவதற்குள் ரெயில் பெட்டியில் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. அதில் இருந்து அதிகளவில் கரும்புகையும் வெளியேறியது. தீப்பிடித்த பெட்டி மட்டும் தனியாக ரெயிலில் இருந்து அகற்றப்பட்டு, பிற்பகல் 3.20 மணிக்கு ரெயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. பெட்டியில் எாிந்த தீயை தீயணைப்பு படையினர் மாலை 4 மணியளவில் அணைத்தனர்.

விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பியதாக அதிகாரி ஒருவர் கூறினார். எனினும் ரெயில் பெட்டியில் இருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்