சீனாவில் இருந்து பெங்களூரு வந்த வாலிபருக்கு தொற்று உறுதி

பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் சீனாவில் இருந்து வந்த வாலிபருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர் புதிய வகை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறாரா? என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-12-26 18:45 GMT

பெங்களூரு:-

சீனாவில் இருந்து வந்த வாலிபர்

சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனாவான பி.எப்.-7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயப்படுத்தி இருப்பதுடன், தொற்று பாதிப்பு இருந்தால் தனிமைப்படுத்தவும் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது சீனாவில் இருந்து நேரிடையாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. அவர், டெல்லி அருகே ஆக்ராவை சேர்ந்த 35 வயது வாலிபர் ஆவார். சீனாவில் இருந்து அந்த வாலிபர் வந்திருந்ததால், உடனடியாக அவர் பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆய்வுக்கு பின் தெரியவரும்

அந்த வாலிபர், புதிய வகை கொரோனாவான பி.எப்.7 வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. இதையடுத்து, அவரது ரத்த மாதிரி மற்றும் சளி சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வு கிடைத்த பின்பு தான் பி.எப்.7 வைரஸ் பாதிப்புக்கு ஆக்ரா வாலிபர் உள்ளாகி இருக்கிறாரா? என்பது தெரியவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறுகையில், சீனாவில் இருந்து வந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் பெங்களூரு நகருக்குள் வரவில்லை. எந்த வகையான வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது ஆய்வுக்கு பின்னர் தான் தெரியவரும். பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

12 பேருக்கு தொற்று பாதிப்பு

இதுகுறித்து சுகாதார துறை மந்திரி சுதாகர் நிருபர்களிடம் கூறும் போது, பெங்களூரு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரம் 867 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 12 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 6 பேர் வீட்டு தனிமையிலும், சீனாவில் இருந்து வந்த வாலிபர் உள்பட 6 பேர் ஆஸ்பத்திரியிலும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீனாவில் இருந்து வந்த வாலிபர் பி.எப்.7 வைரஸ் தொற்றுக்கு தான் உள்ளாகி இருக்கிறார் என்று இன்னும் உறுதியாகவில்லை, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்