போலீஸ் வாகனத்தில் சென்று தேர்வு எழுதிய மாணவர்
சி.இ.டி. பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், போலீஸ் வாகனத்தில் வந்து மாணவர் ஒருவர் தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:-
2½ லட்சம் பேர்
கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட பல்வேறு தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை கர்நாடக தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது. இந்த தேர்வை சுமார் 2½ லட்சம் மாணவர்கள் எழுதுவதற்கு விண்ணப்பித்தனர். இதற்காக பெங்களூருவில் 121 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாள் தேர்வு நேற்று நடைபெற்றது. நேற்று கன்டீரவா மைதானத்தில் முதல்-மந்திரி பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனால் அந்த சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே மைதானத்தை சுற்றி உள்ள தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள், காலையில் 8.30 மணிக்கே வந்து சேர்ந்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில், மாணவர்கள் குறித்த நேரத்தில் சென்றடைந்தனர். மேலும் அவர்கள் நிதானமாக தேர்வை எழுதியதாக, தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் கூறினர்.
போலீஸ் வாகனத்தில்...
இதற்கு மத்தியில் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து மாணவர் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக கோரமங்களா செல்ல வேண்டி இருந்தது. ஆனால் பதவியேற்பு விழா நடைபெற்றதால் மெஜஸ்டிக் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், மாணவர் சரவணகுமாரை துரிதமாக தங்கள் வாகனத்தில் அழைத்து சென்றனர். சுமார் 20 நிமிடங்களில் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்ற அவர்கள், மாணவரை ஆசுவாசப்படுத்திவிட்டு தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.