கைகளில் செருப்புடன் திருட செல்லும் விசித்திர கொள்ளை கும்பல் கைது; ரூ.1 கோடி பறிமுதல்

மத்திய பிரதேசத்தில் திருட போகும்போது கைகளில் செருப்புடன் செல்லும் விசித்திர கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்து ரூ.1 கோடியை கைப்பற்றி உள்ளது.

Update: 2022-12-10 01:39 GMT



போபால்,


மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன என போலீசாருக்கு தகவல் சென்றது. இதனை முன்னிட்டு தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளது.

அவர்கள் 12-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிய வந்து உள்ளது. இதுபற்றி கூடுதல் துணை காவல் ஆணையாளர் சைலேந்திர சிங் சவுகான் கூறும்போது, நகரில் கொள்ளை சம்பவங்கள் பற்றி அறிந்து தீவிர விசாரணை நடந்தது.

அதில், இந்த விசித்திர கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்ட பகுதியை சேர்ந்தவர்களான அவர்கள் பாங்கியா தாபர் (வயது 26), பராஸ் ஆலவா (வயது 25), சந்தோஷ் பவார் (வயது 25) மற்றும் நிஹால் சிங் (வயது 38) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் நடந்த விசாரணையில், கொள்ளை சம்பவத்திற்கு செல்லும்போது, விசித்திர வழக்கம் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்கள் செருப்புகளை கைகளில் சுமந்தபடி சென்றுள்ளனர்.

இதற்கு பின்னால் இரண்டு காரணங்கள் உள்ளன. அவற்றில், இப்படி செல்வதனால் தங்களை போலீசாரால் கைது செய்ய முடியாது என்ற மூடநம்பிக்கை ஒன்று ஆகும்.

இரண்டாவது, அவர்கள் வரும் சத்தம் நாய்களுக்கும் மற்றும் மக்களுக்கும் கேட்காது என்பதற்காக என தெரிய வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்த பிற நபர்கள் தப்பியுள்ளனர். அவர்களை தேடும் முயற்சிகள் நடந்து வருகின்றன என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்