பெங்களூரு மல்லேசுவரத்தில் அதிநவீன டிஜிட்டல் ஆஸ்பத்திரி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்துவைத்தார்

பெங்களூரு மல்லேசுவரத்தில் அதிநவீன டிஜிட்டல் ஆஸ்பத்திரியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்துவைத்தார்.

Update: 2022-09-17 20:08 GMT

பெங்களூரு:

அதிநவீன டிஜிட்டல் ஆஸ்பத்திரி

பெங்களூரு மல்லேசுவரம் தொகுதியில் உள்ள பேலஸ் குட்டதஹள்ளியில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரி, நாட்டிலேயே முதல் முறையாக அதிநவீன டிஜிட்டல் ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலையில் நடைபெற்றது.

இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த ஆஸ்பத்திரியை தொடங்கி வைத்தார். இதுதவிர மல்லேசுவவரம் தொகுதியில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

மிகுந்த மகிழ்ச்சி

பெங்களூரு மல்லேசுவரத்தில் நவீன டிஜிட்டல் ஆஸ்பத்திரியை தொடங்கி வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த ஆஸ்பத்திரி மூலமாக பல்வேறு நோய்களுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் 150 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் ஆய்வகம், எக்ஸ்-ரே, ஸ்கேனிங், இ.சி.ஜி மற்றும் பி.எப்.டி. உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. இதுதவிர கண் பரிசோதனை, பல் பரிசோதனை, அவசர சிகிச்சை செய்து கொள்ளும் வசதிகளும் இருக்கிறது. பிரதமரின் மருந்து விற்பனை நிலையமும் இருக்கிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மிகப்பெரிய தனியார் ஆஸ்பத்திரிகளில் இருக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும் இநத ஆஸ்பத்திரியில் உள்ளது. குறைந்த செலவில் ஏழை எளிய மக்கள் சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் வசதிகளும் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மந்திரி அஸ்வத் நாராயணும் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்