நபரின் பேச்சை கேட்டு, நடந்து உணவை வாங்கி சாப்பிட்ட அரிய வகை மான்... ஆச்சரியம் அளிக்கும் வீடியோ
உணவு தேடி நகருக்குள் வந்த, அழிவு நிலையிலுள்ள அரிய வகை மான், நபரின் பேச்சை கேட்டு, நடந்து உணவை வாங்கி சாப்பிட்ட வீடியோ ஆச்சரியமடைய செய்து உள்ளது.
புதுடெல்லி,
இந்திய துணை கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதியை வாழ்விடங்களாக சாம்பார் வகை மான்கள் கொண்டுள்ளன. உருவில் பெரிய இந்த வகை மான்கள் தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ வாழும் தன்மை கொண்டவை. கடந்த 2008-ம் ஆண்டில், அழிவு நிலையில் உள்ள பட்டியலில் இவை வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், இந்திய வன துறை அதிகாரியான டாக்டர் சாம்ராட் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெரிய கொம்புகளை கொண்ட சாம்பார் மான் ஒன்று ஊருக்குள் வந்து தேநீர் கடை ஒன்றின் முன் நிற்கிறது. நபர் ஒருவர், கையில் உணவுடன் இந்த பக்கம் வரும்படி அதனை அழைக்கிறார்.
அதனை புரிந்து கொண்டு அந்த மானும், அவரை நோக்கி செல்கிறது. அதற்கு அந்த நபர் உணவு வழங்குகிறார். அவரது கைகளில் இருந்த உணவை அது உண்கிறது. உணவின் ஒரு பகுதியை கீழே வைக்கும்போது அதனை சாப்பிடாமல் அவரை நோக்கி பார்க்கிறது. அதன்பின் மீண்டும் உணவை எடுத்து தனது கைகளால் கொடுக்கும்போது, அதனை உண்கிறது.
இந்த சமயத்தில், தேநீர் கடையில் இருந்த சிலர் மானை நெருங்கி உற்று பார்க்கின்றனர். மற்றொரு நபர், மானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை எடுக்கும்படி தனது நண்பரை கேட்கிறார். அதன் கொம்புகளையும் தொட்டு பார்க்கிறார். இன்னொரு நபர் மானுக்கு தேநீர் வழங்க முற்படுகிறார். ஆனால், அதனை குடிக்க மான் மறுத்து விடுகிறது.
இதுபற்றி அந்த அதிகாரி கூறும்போது, உள்ளூர் ஓட்டலுக்கு மான் சென்றால், அதற்கு என்ன வழங்குவார்கள்? காட்டு விலங்குகள் மனிதர்களின் குடியிருப்பு பகுதிக்கு வருவது நல்லதொரு அறிகுறியல்ல என கூறுகிறார்.
பொதுவாக விலங்குகள் தங்களது வாழ்விடங்களிலேயே வசிக்க விரும்புபவை. ஆனால், மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் சுற்றுலாவாசிகள் பெருக்கம் ஆகியவற்றால் அவற்றின் வாழ்விடங்கள் குறைந்து வருவதுடன், மக்களை தேடி அவை ஊருக்குள் வருவதும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், சில சமயங்களில் ஆபத்து நேரிடுகிறது. ஒரு சில மறக்க முடியாத தருணங்களும் உருவாகின்றன.