பிரச்சினைகளை தவிர்ப்பதில் பிரதமர் மோடி சிறுத்தையை விட வேகமானவர்- ஒவைசி குற்றச்சாட்டு
வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி நாம் பேசும்போது, பிரதமர் சிறுத்தையை விட வேகமாக செல்வதாக ஒவைசி கூறினார்.;
ஜெய்ப்பூர்,
தீவிரமான பிரச்சினைகள் எழும் போது அதை தவிர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடி சிறுத்தையை விட வேகமானவர் என இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டு நாள் ராஜஸ்தான் பயணமாக ஜெய்ப்பூருக்கு ஒவைசி இன்று சென்றுள்ளார். அங்கு பத்திரிகைக் யாளர்களை சந்தித்த ஒவைசியிடம், 'பிரதமர் மோடி தனது பிறந்த நாளன்று (செப்டம்பர் 17) வனவிலங்கு சரணாலயத்தில் 8 சிறுத்தைகளை விடுவிப்பது' குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஒவைசி, பணவீக்கம் அல்லது வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகள் பற்றி நாம் பேசும்போது அதை தவிர்ப்பதில், பிரதமர் சிறுத்தையை விட வேகமாக செல்வதாக விமர்சித்துள்ளார்.
சீனா நமது நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது பற்றி பிரதமரிடம் கேட்டால், அவர் சிறுத்தையை விட வேகமாக இருப்பதாக ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார். அவர் இந்த விஷயங்களில் மிக விரைவாக இருப்பதாகவும் அவர் மெதுவாக செல்லச் வேண்டும் எனவும் ஒவைசி தெரிவித்துள்ளார்.