கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

Update: 2023-08-01 21:46 GMT

பெங்களூரு:-

ஆலோசனை கூட்டம்

கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று(புதன்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், முக்கிய மந்திரிகள், மூத்த தலைவர்கள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதில் எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதற்காக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவர் டெல்லி செல்லும் முன்பு பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

டெல்லியில் நாளை(இன்று) எங்கள் கட்சியின் கர்நாடக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதற்காக நான் டெல்லி செல்கிறேன். கர்நாடக திட்டங்கள் தொடர்பாக சில மத்திய மந்திரிகளை நேரில் சந்திக்க சற்று முன்கூட்டியே நான் செல்கிறேன். கட்சி வேலை, அரசு வேலை இரண்டும் எனக்கு உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியின் நலன் கருதி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்க உள்ளோம்.

வியூகம் வகுக்கப்படும்

மாவட்ட பொறுப்பு மந்திரிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு பொறுப்பேற்று இப்போது முதலே மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். அவர்கள் மக்களை சந்தித்து அரசின் உத்தரவாத திட்டங்கள் மக்களை போய் சேருகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுக்கப்படும்.

மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். மொத்தம் 50 பேர் கர்நாடகத்தில் இருந்து வந்து டெல்லி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் மூன்று பிரிவுகளாக கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளனர்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மந்திரிகள் மீது புகார்

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த மாதம்(ஜூலை) 27-ந் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பி.ஆர்.பட்டீல் உள்பட 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் மீது புகார் கூறினர். தங்களின் பணிகள் மற்றும் பரிந்துரைகளை மந்திரிகள் மதிப்பது இல்லை என்று கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அவர்களை முதல்-மந்திரி சித்தராமையா சமாதானப்படுத்தி, இனி உங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த கூட்டத்திற்கு முன்பு மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத், முதல்-மந்திரியையே மாற்றிவிடுவேன் என்று பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்