காட்டு யானை தாக்கி விவசாயி சாவு

தரிகெரே அருகே தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயியை காட்டு யானை தாக்கி கொன்றது.

Update: 2022-12-25 18:45 GMT

சிக்கமகளூரு:-

விவசாயி சாவு

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா ராஜபோகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஈரப்பா(வயது 60). அதே கிராமத்தில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டம் வனப்பகுதியையொட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காட்டுயானைகள் மற்றும் சிறுத்தை, புலி போன்ற விலங்குகள், அடிக்கடி தோட்டத்திற்கு வந்து அட்டகாசம் செய்து வந்தன. இதுகுறித்து வனத்துறைக்கு பலமுறை புகார் அளிக்கப்பட்டது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிைலயில் நேற்று ஈரப்பா தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென்று காட்டுயானை ஒன்று வந்தது.

இதை பார்த்த ஈரப்பா அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். ஆனால் யானை விடாமல் துரத்தி சென்று தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியதுடன், காலால் மிதித்து கொன்றது. மேலும் தோட்டத்தில் இருந்த குடிசையையும் யானை துவம்சம் செய்தது. இதை பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டுயானையை அங்கிருந்து விரட்டி அடித்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஈரப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

இதுகுறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர முடிவு காணவேண்டும். இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள், காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் வனத்துறை சார்பில் விவசாயி ஈரப்பாவின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. அரசு சார்பிலும் உரிய இழப்பீடு தொகை பெற்று தருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறினர். இதை ஏற்ற கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்