தந்தை கண்எதிரே கல்லூரி மாணவி பலி

பெங்களூருவில் தனியார் பஸ்-ஸ்கூட்டர் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை கண் எதிரே மகள் பலியான பரிதாபம் நடந்துள்ளது.

Update: 2023-07-03 21:39 GMT

பெங்களூரு:-

தனியார் பஸ் மோதியது

பெங்களூரு ஜாலஹள்ளி அருகே வசித்து வருபவர் சதீஸ். இவரது மகள் திஷா (வயது 18). இவர், தனியார் கல்லூரியில் பி.யூ.சி. படித்து வந்தார். தினமும் தனது மகளை ஸ்கூட்டரில் அழைத்து சென்று சதீஸ் கல்லூரியில் விடுவது வழக்கம். அதன்படி, நேற்று காலையில் மகளை அழைத்து கொண்டு சதீஸ் ஸ்கூட்டரில் புறப்பட்டார்.

காலை 6.30 மணியளவில் ஜாலஹள்ளி கிராஸ் பகுதியில் தந்தையும், மகளும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் வந்த ஒரு தனியார் பஸ்சும், ஸ்கூட்டரும் மோதிக் கொண்டது. இதனால் ஸ்கூட்டரில் இருந்து சதீசும், திஷாவும் தவறி சாலையில் விழுந்தனர். இந்த நிலையில், அதே தனியார் பஸ் சக்கரம் திஷா மீது ஏறி இறங்கியது.

கல்லூரி மாணவி சாவு

சதீஸ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். உயிருக்கு போராடிய திஷாவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். தனது கண்எதிரே மகள் பலியானதால் சதீஸ் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதுபோல், தனது மகள் என்ஜினீயரிங் படிக்க விரும்பியதாகவும், அதற்குள் இறந்து விட்டதாகவும் கூறி திஷாவின் தாய் அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

இதுகுறித்து பீனியா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட தனியார் பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்