கார் கவிழ்ந்து இளம்பெண் பலியான விவகாரம்; திட்டமிட்ட கொலை என உறவினர் குற்றச்சாட்டு
பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் அவருடைய நண்பர் சுராஜ் மூல் என்பவருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
புனே,
மராட்டியத்தின் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில் சுவேதா சர்வாசே (வயது 23) என்ற இளம்பெண், ரிவர்ஸ் கியரில் இருந்த காரை இயக்கி, பின்னால் சென்று 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பலியானார்.
இந்த சம்பவத்தில், அவருடைய நண்பரான சுராஜ் மூல் என்பவர் மீது 304 (ஏ) பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, சுவேதாவுக்கு ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா? இல்லையா? என தெரியாமலேயே காரின் சாவியை தோழியிடம் கொடுத்திருக்கிறார்.
அவரை சுராஜ் வீடியோவும் எடுத்திருக்கிறார் என கூறியுள்ளார். அந்த காரின் ஆக்சிலேட்டரை சுராஜின் தோழி அழுத்தியதும், ரிவர்ஸ் கியரில் இருந்த கார் பின்னால் இருந்த தடுப்பானை உடைத்து கொண்டு சென்று பள்ளத்தாக்கிற்குள் சரிந்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர், ஒரு மணிநேரத்திற்கு பின்னரே அவரை அடைய முடிந்தது. காரில் இருந்து அவரை மீட்டனர். பின்னர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சட்ட வழிகாட்டுதலின்படி, சுராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என போலீசார் தெரிவித்தனர். சுவேதாவின் உறவினரான பிரியங்கா கூறும்போது, இந்த படுகொலையை திட்டமிட்டு சுராஜ் செய்துள்ளார் என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார். விபத்து பற்றி 5 முதல் 6 மணிநேரத்திற்கு பின்னரே சுவேதாவின் மரணம் பற்றி எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.
நாங்கள் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் எதுவும் வெளியிடவில்லை. சுராஜ், திட்டமிட்டே கொலை செய்வதற்காக நகரில் இருந்து 30 முதல் 40 கி.மீ. தொலைவுக்கு அவளை கொண்டு சென்றுள்ளார் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.