உத்தரபிரதேசத்தில் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தலித் மாணவர் மீது கொடூர தாக்குதல்...!
உத்தரபிரதேசத்தில் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தலித் மாணவவை சரமாரியாக தாக்கினர்.
ஷாஜகான்பூர்,
உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரை சேர்ந்த அர்ஜூன் ராணா என்ற தலித் மாணவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அங்குள்ள பாரத மாதா சிலைக்கு 'ஷூ' அணிந்து கொண்டு மாலை அணிவிக்க முயன்றார். இதை மாற்று சமூக மாணவர்கள் தடுத்து நிறுத்தினர். என்றாலும் ஆத்திரம் அடங்காத அவர்கள், அர்ஜூன் ராணா மீது கோபத்திலேயே இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி கல்லூரி மைதானத்தில் அர்ஜூன் ராணா தனியாக நின்றிருந்தார். அப்போது அங்கே வந்த மாணவர்கள், அர்ஜூன் ராணாவை சரமாரியாக தாக்கினர். கொடூரமாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய ஷபாஸ் யாதவ், சூர்யன்ஷ் தாகூர் உள்ளிட்ட மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.