விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2023-09-30 18:45 GMT

சிக்பள்ளாப்பூர்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிக்கடிகேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நிஷால் தேஜ் (வயது 12). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள ஏரியில் கரைக்கப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட நிஷால் தேஜ், தனது நண்பர்களுடன் விநாயகர் சிலையை கரைக்க ஏரிக்கு சென்றான். ஏரிக்குள் இறங்கி விநாயகர் சிலையை கரைத்த போது நிஷால் தேஜ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் நீரில் மூழ்கி அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பின்னர் சிறுவன் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக நந்திகிரிதாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்