குந்தாப்புரா அருகே தூக்குப்போட்டு 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

குந்தாப்புரா அருகே மழையில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்து 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2022-07-12 14:45 GMT

மங்களூரு;

மழையில் விளையாடியதை...

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா சாலிகிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி பூஜாரித்தி. இவரது கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு நாகேந்திரன்(வயது 14) என்ற மகன் இருந்தான்.

நாகேந்திரன், அதேப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். லட்சுமி பூஜாரித்தி, ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் லட்சுமி பூஜாரித்தி ஓட்டலை திறந்து வியாபாரம் செய்துள்ளார். இதற்கிடையே வீட்டில் இருந்த நாகேந்திரன், மழையில் நனைந்து விளையாடியுள்ளான்.

இதைதொடர்ந்து மதியம் சாப்பிட ஓட்டலுக்கு சென்றுள்ளான். அப்போது லட்சுமி பூஜாரித்தி, மகன் நாகேந்திரனை மழையில் நனைந்து விளையாடியதற்கு கண்டித்துள்ளார். மேலும் ஓட்டலில் கூட்டம் இருந்ததால் வீட்டிற்கு சென்று சாப்பிடும்படி நாகேந்திரனிடம் கூறியுள்ளார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த நாகேந்திரன், வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலை வீடு திரும்பிய லட்சுமி பூஜாரித்தி, மகன் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுபற்றி கோட்டா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் தற்கொலை செய்த நாகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மழையில் நனைந்து விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்து நாகேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்