60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; தனியார் மருத்துவமனை ஊழியர் கைது

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் 60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-09-07 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹெப்பால் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனைக்கு கடந்த 3-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக 60 வயது மூதாட்டி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மூதாட்டியை மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தினார்கள்.

இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து, மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மறுநாள் (4-ந் தேதி) அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் ஆய்வக ஊழியராக வேலை பார்க்கும் அசோக் என்பவர் மூதாட்டியின் வார்டுக்கு வந்துள்ளார். அப்போது மூதாட்டியிடம், உங்களுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பின்னர் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் செய்யும் அறைக்கு மூதாட்டியை அசோக் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து ஸ்கேன் செய்வதற்காக மூதாட்டியின் ஆடைகளை கழற்ற வைத்ததாகவும், அதன்பிறகு மூதாட்டிக்கு அசோக் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அசோக்கிடம் இருந்து தப்பித்துள்ளார்.

மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் அசோக் மீது மூதாட்டி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்