கர்நாடகத்தின் 8-வதுமுதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ்

கர்நாடக மாநிலத்தின் 8-வது முதல்-மந்திரியாக தேவராஜ் அர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Update: 2023-04-11 18:45 GMT

பெங்களூரு- 

மாநிலத்தின் 8-வது முதல்-மந்திரியாக இருந்தவர் தேவராஜ் அர்ஸ். இவர் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா கலஹள்ளி கிராமத்தில் கடந்த 1915-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி பிறந்தார். உடையார் வம்சத்தை சேர்ந்த இவருக்கு, தேவராஜ் அர்ஸ்சின் பெற்றோர் அவரது 15-ம் வயதில் சிக்கம்மணி என்ற சிறுமியை குழந்தை திருமணம் செய்து வைத்தனர். இதை தொடர்ந்து மைசூருவில் கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றார்.

இவரது அரசியல் ஆர்வத்திற்கு அவரது பெற்றோர் தடை போட்டதால் கல்லூரி படிப்புக்கு பின் விவசாய பணி மேற்கொண்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடந்த 1952-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில் மைசூரு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் மைசூரு மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற இவர், கடந்த 1969-ம் ஆண்டு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த போது இந்திய தேசிய காங்கிரஸ்(இந்திரா) கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

மேலும் அகில இந்திய தேசிய காங்கிரஸ்(இந்திரா) கட்சியின் ஆலோசனை குழுவில் பலம் வாய்ந்த தலைவராகவும் அப்போது இவர் வலம் வந்தார். மேலும் 1971-ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் இவரது தலைமையிலான அணி 27 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றியது. மேலும் 1972-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இவர் தலைமையிலான அணி மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. இதைதொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் 5-வது முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

ஆனால் ஆட்சி முடிவடைய 6 மாதங்கள் இருக்கும் போது மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து 1978-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் இவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. இதைதொடர்ந்து 2-வது முறை மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற இவர், தனது 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வறுமையை ஒழிக்க தனது ஆட்சியில் இவர் முக்கியத்துவம் கொடுத்தார்.

இவரது தலைமையிலான மந்திரி சபை கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தியது. நிலங்களை முறைப்படுத்தும் நோக்கில் உழுபனுக்கே நிலம் சொந்தம் என்ற குரல் இவரது ஆட்சியில் ஓங்கி ஒலித்தது. அன்றைய காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்த மேற்கு வங்காளம், கேரளாவை தவிர்த்து நில பொதுவுடமை கொள்கை கர்நாடகத்திலும் சிறப்பாக அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலை தேடி புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு இவரது ஆட்சி காலத்தில் தங்கும் விடுதிகளும் கட்டி கொடுக்கப்பட்டது.

இதேபோல் அனைத்து வீடுகளுக்கும் மின்விளக்கு வழங்கும் திட்டம் இவரது ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 1980-ம் ஆண்டு கர்நாடக கிராந்தி ரங்க என்ற கட்சியை தொடங்கிய இவர், அப்போது நடந்த பொது தேர்தலில் ஒரு தொகுதி மட்டும் கைப்பற்றி படுதோல்வி அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 1982-ம் ஆண்டு தான் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அந்த கட்சியை கலைத்தார். 28 ஆண்டுகள் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர் 1982-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி உயிர் இழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்