நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு
நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
பால்கர்,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே உள்ள பந்துப் பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி ஒருவர் பால்கர் மாவட்டம் ரங்கானில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு தனது பாட்டியுடன் சென்றுள்ளார். அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுமி குளித்து விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் மதியம் 1 மணியளவில் நீச்சல் குளத்தில் இருந்த அனைவரும் மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சிறுமியின் பாட்டி மற்றும் பயிற்சியாளர்களும் சென்றுள்ளனர். அப்போது சிறுமி மட்டும் நீச்சல் குளத்தை விட்டு வெளியேறாமல் தனியாக விளையாடிள்ளார். சிறுமி நீச்சல் குளத்தில் இருந்ததை வேறு யாரும் கவனிக்கவில்லை.
அப்போது திடீரென நீரில் மூழ்கிய சிறுமி, உயிருக்கு போராடிய நிலையில் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.