பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடு: சிறை கண்காணிப்பாளர் உள்பட 7 போலீசார் பணி இடமாற்றம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடந்த விவகாரத்தில் சிறை கண்காணிப்பாளர் உள்பட 7 போலீசார் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-06-22 22:29 GMT

பெங்களூரு:

வீடியோ வெளியானது

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 2 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறையில் இருக்கும் ரவுடிகள் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோ கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதற்கு சிறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

500 பக்க அறிக்கை தாக்கல்

இதுபற்றி விசாரணை நடத்த கூடுதல் டி.ஜி.பி. முருகன் தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த குழுவினர் தாங்கள் நடத்திய விசாரணை குறித்து 500 பக்க அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் சிறையில் முறைகேடு நடப்பதாகவும், சிறை அதிகாரிகள், போலீஸ்காரர்கள் என 18 பேருக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது.

7 பேர் பணி இடமாற்றம்

இந்த நிலையில் சிறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறை கண்காணிப்பாளர் அசோக் உள்பட 7 போலீஸ்காரர்களை பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சிறை கண்காணிப்பாளர் அசோக் விஜயாப்புரா சிறைக்கும், போலீஸ்காரர்களான ரமேஷ் பல்லாரி சிறைக்கும், சிவானந்த் கானிகர் பெலகாவி சிறைக்கும், உமேஷ் தொட்டமணி மைசூரு சிறைக்கும், லோகேஷ் தார்வார் சிறைக்கும், பீமண்ணா தேவப்பா சிவமொக்கா சிறைக்கும், மகேஷ் சித்தனகவுடா பட்டீல் கலபுரகி சிறைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்த சசிகலா இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் சிறையில் சொகுசு வசதி பெற ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தார் என்ற வழக்கின் விசாரணை தற்போது ஊழல் தடுப்பு படை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்