கர்நாடகத்தில் இரு லாரிகள் மோதியதில் கார் உருக்குலைந்து ஒரே குடும்பத்தில் 7 பேர் நசுங்கி சாவு

விஜயநகர் அருகே இரு லாரிகள் மோதியதில் கார் உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தில் 7 பேர் பலியானார்கள். கோவிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.;

Update:2023-10-10 00:15 IST

விஜயநகர்:

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 13 பேர் நேற்று காலை ஒரு காரில் ஹரப்பனஹள்ளி தாலுகா கூலஹள்ளியில் உள்ள கோனிபசவேஸ்வரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய சென்றனர்.அவர்கள் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அதே காரில் அவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் விஜயநகர் புறநகரில் சுரங்கபாதை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் அதே சாலையில் எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரியின் ஸ்டிரீயங் முறிந்தது. இதனால் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு சாலையின் மறுபுறம் ஓடி 13 பேர் பயணித்த கார் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் டிப்பர் லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதே சமயத்தில் விபத்தில் சிக்கிய காரின் பின்னால் மற்றொரு லாரியும் பயங்கரமாக மோதியது. இரு லாரிகளுக்கு இடையே கார் சிக்கி உருக்குலைந்து சின்னாபின்னமானது.

இதில் காரில் இருந்தவர்கள் உடல்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தை பார்த்ததும் அப்பகுதி மக்களும், விஜயநகர் போலீசாரும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியானதும், மேலும் 6 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியதும் தெரியவந்தது. மேலும் 2 லாரிகளின் டிரைவர்களும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து 8 பேரையும் போலீசார் மீட்டு ஒசப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காரில் பயணித்து காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே பலியான 7 பேரின் உடல்களும் காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்தன.

இதனால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகே மீட்டனர். பின்னர் 7 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஒசப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னர் நடத்திய போலீசாரின் விசாரணையில், பலியானவர்கள் ஒசப்பேட்டையை சேர்ந்த உமா (வயது 45), கெஞ்சவவ்வா (60), பாக்யம்மா (32), அனில் (30), கோனி பசப்பா (65), பீமலிங்கப்பா (49), சிறுவன் யுவராஜா (4) ஆகியோர் என்பதும், பலியான இவர்களும், காயமடைந்தவர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

மேலும் விபத்து நடந்த பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் தான் பலியானவர்களின் வீடுகள் உள்ளன. அதற்குள் விபத்தில் சிக்கி அவர்கள் பலியான சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பாக விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஹரிபாபு சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் மீட்பு பணியை முடுக்கி விட்டார்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள், பலியானவர்கள் உடல்களை மீட்ட பிறகு விபத்தில் சிக்கிய வாகனங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பிறகே அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

டிப்பர் லாரி-கார் நேருக்குநேர் மோதிய விபத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்