முகமது பாசில் கொலையில் 7 பேர் கைது; போலீஸ் கமிஷனர் சசிகுமார் தகவல்

சூரத்கல்லில் நடந்த முகமது பாசில் கொலையில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-02 14:53 GMT

மங்களூரு;

முகமது பாசில் கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட மங்கள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது பாசில் (வயது 23). இவர் கடந்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி சூரத்கல் மார்க்கெட் பகுதியில் தனது நண்பருக்கு சொந்தமான துணிக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், முகமது பாசில் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

7 பேர் கைது

சூரத்கல்லில் நடந்த முகமது பாசில் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்தபோது, அந்த கார் அஜித் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது, முகமது பாசிலை கொலை செய்ய அஜித்தின் காரை மர்மநபர்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒருநாளுக்கு ரூ.5 ஆயிரம் என 3 நாட்களுக்கு ரூ.15 ஆயிரம் வாடகை பேசி உள்ளனர்.

இதையடுத்து அஜித்தை கைது செய்த தனிப்படை போலீசார், அவர் கொடுத்த தகவலின்பேரில் உடுப்பி அருகே உதயாவர் பகுதியில் பதுங்கி இருந்த மேலும் 6 பேரை இன்று (அதாவது நேற்று) கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள், சுகாஷ் (29), தீக்‌ஷித் (21), சீனிவாஸ் (23), அபிஷேக் (21), மோகன் (26), கிரிதர் (23) என்பது தெரியவந்தது.

கொலைக்கான காரணம்

கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். முகமது பாசிலை கொலை செய்ய அவர்கள் 7பேரும் கடந்த 26-ந்தேதியே திட்டம் தீட்டி உள்ளனர்.

அன்றைய தினம் நடந்த பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் ெகாலைக்கு பழிவாங்க, முகமது பாசிலை இவர்கள் கொலை செய்தார்களா? என்பது தெரியவில்லை. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போது தான் கொலைக்கான காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்