குடகில் தொழில் அதிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி

பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்க அனுமதி அளிப்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குடகில் நடந்துள்ளது.

Update: 2023-09-25 18:45 GMT

குடகு-

பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்க அனுமதி அளிப்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குடகில் நடந்துள்ளது.

தொழில் அதிபர்

குடகு மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்க எண்ணினார். இதற்காக பிரபல பெட்ரோல் விற்பனை நிறுவனத்திடம் அனுமதி பெற முயன்றார். இதற்காக அவர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். அப்போது அவரது மின்னஞ்சல்(இ-மெயில்) முகவரிக்கு ஆன்லைன் மூலம் விரைவில் அனுமதி அளிப்பதாக அந்த பெட்ரோல் விற்பனை நிறுவனத்திடம் இருந்து தகவல் வந்திருந்தது.

அதை நம்பிய அந்த தொழில் அதிபர் ஆன்லைன் மூலம் விரைவில் தனக்கு அனுமதி வழங்கும்படி கோரினார். அதற்காக முதலில் ரூ.25 ஆயிரம் செலுத்தும்படி மின்னஞ்சல் மூலம் பதில் தகவல் வந்திருந்தது .

ரூ.7.10 லட்சம் அனுப்பினார்

அதை நம்பிய அந்த தொழில் அதிபர் முதலில் ரூ.25 ஆயிரத்தை அந்த மின்னஞ்சல் முகவரில் தெரிவிக்கப்பட்டு இருந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் பல்வேறு தவணைகளாக அவர் மொத்தம் ரூ.7.10 லட்சம் அனுப்பினார். ஆனாலும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேற்கொண்டு ரூ.7 லட்சம் அனுப்பும்படி கேட்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த தொழில் அதிபர் இதுபற்றி மைசூருவில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று கேட்டார்.

அப்போது அவர்கள் தாங்கள் அவ்வாறு யாருக்கும் ஆன்லைன் மூலம் அனுமதி வழங்குவதில்லை என்றும், தாங்கள் யாரிடமும் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தனர்.

போலீசில் புகார்

இதனால் பதறிப்போன அந்த தொழில் அதிபர் உடனடியாக தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது அவர் அனுப்பிய பணம் பங்கஜ் குப்தா என்பவருடைய வங்கி கணக்கிற்கு சென்றிருப்பதும், பெங்களூரு, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய பகுதிகளில் உள்ள 3 வெவ்வேறு வங்கிகளுக்கு பங்கஜ் குப்தாவின் பெயரில் அந்த பணம் செலுத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த தொழில் அதிபர் உடனடியாக இதுபற்றி கோணிகொப்பா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தொழில் அதிபரை ஏமாற்றிய அந்த மர்ம நபரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்