இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-07-26 09:10 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலால் 349 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் மட்டும் 200 பேர் புலிகள் தாக்கியதில் பலியாகியுள்ளனர்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின் படி, கடந்த 2019ம் ஆண்டில் 96 புலிகளும், 2020ம் ஆண்டில் 106 புலிகளும், 2021ம் ஆண்டில் 127 புலிகளும், 2022ம் ஆண்டில் 121 புலிகளும், 2023ம் ஆண்டில் 178 புலிகளும் இறந்துள்ளன. 2023ம் ஆண்டில் புலிகள் இறப்பு எண்ணிக்கை 2012 க்குப் பிறகு மிக அதிகமாக உள்ளதாக தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங், 2019, 2020ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021ம் ஆண்டில் 59 பேரும், 2022ம் ஆண்டில் 110 பேரும், 2023ம் ஆண்டில் 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியானதாக தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் புலிகளின் தாக்குதலில் 59 பேரும், மத்திய பிரதேசத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, 2022ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதமாகும். இந்திய அரசு புலிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, ஏப்ரல் 1, 1973ம் ஆண்டில் இந்திய புலிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், இது 18,278 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 9 புலிகள் காப்பகங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது, இந்தியாவில் 78,735 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட நாட்டின் புவியியல் பரப்பில் 2.4 சதவீதமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்