முன்பதிவில்லா டிக்கெட் மூலம் இந்திய ரெயிவேக்கு வருவாய் 6 மடங்கு உயர்வு..!

முன்பதிவில்லா டிக்கெட் மூலம் இந்திய ரெயிவேக்கு வருவாய் 6 மடங்கு உயர்ந்துள்ளது.

Update: 2022-10-12 03:42 GMT

புதுடெல்லி,

கொரோனா நோய் பரவல் ஓய்ந்ததை அடுத்து நாட்டில் மக்கள் நடமாட்டம் சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களும் அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டியுள்ளன.

இந்திய ரெயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் இந்த மாதம் 8-ந்தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த காலக்கட்டத்தில் மொத்தம் சுமார் ரூ.33 ஆயிரத்து 476 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த வருவாய் ரூ.17 ஆயிரத்து 394 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வருவாய் 92 சதவீதம் உயர்ந்துள்ளது.

முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு 34.56 கோடி பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 42.89 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

முன்பதிவு செய்த வகையில் கடந்த ஆண்டு ரூ.16 ஆயிரத்து 307 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. ஆனால் இந்த ஆண்டு ரூ.26 ஆயிரத்து 961 கோடி கிடைத்து இருக்கிறது. இது 65 சதவீதம் அதிகம் ஆகும்.

முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 197 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 90.57 கோடி பேர் பயணம் செய்த நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 268.56 கோடியாக உயர்ந்துள்ளது.

இதைப்போல முன்பதிவு அல்லாத பயணத்தில் வருவாயும் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட 6 மடங்கு உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.1,086 கோடி கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.6 ஆயிரத்து 515 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்