கா்நாடகம், தமிழக மாநிலங்களில் சைபர் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது
கர்நாடகம், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சைபர் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களிடம் பணம் பெற்று ரூ.854 கோடி சுருட்டியது அம்பலமாகி உள்ளது.;
பெங்களூரு:-
சைபர் மோசடி
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சைபர் கிரைம் போலீசார் அதனை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ஒரு மோசடி கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. அந்த கும்பல் வாட்ஸ்-அப் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளில், இரட்டிப்பு லாபம் தருவதாக
கூறி பணம் முதலீடு செய்யுமாறு குறுந்தகவல்களை அனுப்பி வைத்தது. அதனை நம்பிய பலரும் பணம் சம்பாதிக்கும் ஆசையில் அவர்கள் கூறியபடி குறிப்பிட்ட தொகைகளை முதலீடு செய்து வந்துள்ளனர். ஆனால் அந்த கும்பல் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
7 மடிக்கணினி
இந்த நிலையில் பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் ைசபர் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பெங்களூருவை சேர்ந்த மனோஜ், பனிந்திரா, சக்ரதார், சீனிவாஸ், சோமசேகர் மற்றும் வசந்த் ஆகியோர்
என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி ரொக்கம், 13 செல்போன்கள், 7 மடிக்கணினி, பிரிண்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பொருட்கள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பெங்களூருவை சேர்ந்த 6 பேர் கும்பல் ஆன்லைன் மூலம் முதலீடு செய்ய பலரை தூண்டி உள்ளனர். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர், அவர்களது வலையில் வீழ்ந்து பணத்தை இழந்துள்ளனர். சுமார் 5 ஆயிரம் போ் இந்த கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர்.
84 வங்கி கணக்குகள்
தற்போது கைதான 6 பேரும் 84 வங்கி கணக்குகளை பயன்படுத்தி ரூ.854 கோடியை மக்களிடம் இருந்து மோசடி செய்துள்ளனர். கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, மராட்டியம், ஒடிசா, தெலுங்கானா, கேரளா, குஜராத், கோவா மற்றும் அந்தமான் பகுதிகளை சேர்ந்தவர்களையும் இந்த மோசடி வலையில் சிக்க வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் இருந்த ரூ.5 கோடி முடக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த 3 மாதங்களாக தீவிரமாக விசாரணை நடத்தி மோசடி கும்பலை பிடித்த சைபர் கிரைம் போலீசாரை பாராட்டினார்.