கோவில் திருவிழாவில் ஐஸ் கிரீம் சாப்பிட்ட 55 பேருக்கு உடல் நலக்குறைவு

கோவில் திருவிழாவில் ஐஸ் கிரீம் சாப்பிட்ட 55 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

Update: 2023-04-07 01:57 GMT

கார்கோன்,

மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்துக்கு உட்பட்ட சத்தால் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கோவில் வளாகத்தில் தினேஷ் குஷ்வாகா என்பவர் ஐஸ் கிரீம் தயாரித்து விற்பனை செய்தார். இதை ஏராளமானோர் வாங்கி சாப்பிட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. அவர்கள் அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

25 குழந்தைகள் உள்பட 55 பேர் இவ்வாறு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சுமார் 15 பேர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினர். அதேநேரம் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்தது. எனினும் தீவிர சிகிச்சைக்குப்பின் அவர்களின் உடல்நிலை மேம்பட்டது.

இதற்கிடையே ஐஸ் கிரீம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தகவலை அறிந்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஐஸ் கிரீம் மாதிரியையும் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்