நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் நசுங்கி சாவு

யாதகிாி அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் நசுங்கி உயிரிழந்தனர். ஆந்திராவில் இருந்து உரூஸ் திருவிழாவில் பங்கேற்க வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-06-06 18:45 GMT

யாதகிரி:-

5 பேர் சாவு

யாதகிரி (மாவட்டம்) அருகே பாலிசக்ரா கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த கார், அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கி போனது.

இதில், காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

13 பேருக்கு தீவிர சிகிச்சை

இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக யாதகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ராய்ச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சைதாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உரூஸ் திருவிழாவில் பங்கேற்க...

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம் ஆத்மகுரு தாலுகா வெலகோடு கிராமத்தை சேர்ந்த முனீர் (வயது 40), நியாமத் உல்லா (40), முதாசிர் (12), சும்மி (12), ரமீஜா பேகம் (50) என்பதும், படுகாயம் அடைந்தவா்கள் ஆயிஷா (4), அனஸ் (6 மாதங்கள்), சுஹானா (8), ரமீஜா (32), மாசி உல்லா (14), சீமா (12), ரியாஸ் உன்பீ (35), முஜ்ஜு (12), நசீமா (36) மஜூம் பாஷா (40), முஜாகீர் (20), ஹனீபா (30), மற்றும் சோஹல் (15) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் 18 பேரும் ஒரே காரில் ஆந்திராவில் இருந்து கலபுரகியில் நடந்த உரூஸ் திருவிழாவில் பங்கேற்க சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சைதாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்