ஐதராபாத்தில் ஒரு வாரத்தில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள்... அதிர்ச்சி விவரம் வெளியீடு

ஐதராபாத்தில் ஒரு வாரத்தில் பதிவான 5 பாலியல் வன்கொடுமை வழக்குகளை தேசிய மகளிர் ஆணையம் கையிலெடுத்து உள்ளது.

Update: 2022-06-07 13:44 GMT



ஐதராபாத்,



தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைமையிலான சந்திரசேகர ராவ் ஆட்சி தெலுங்கானாவில் நடந்து வருகிறது. அதன் தலைநகரான ஐதராபாத்தில் ஒரு வாரத்தில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் நடந்த மொத்தமுள்ள 5 பாலியல் வன்கொடுமை சம்பவங்களில், முதல் பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த மே மாதம் 28ந்தேதி நடந்துள்ளது. மற்ற இரு சம்பவங்கள் பற்றிய வழக்குகள் கடந்த ஞாயிற்று கிழமை பதிவாகி உள்ளன. அதுதவிர இரு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நேற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இதில் முதல வழக்கில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கடந்த மே மாதம் 28ந்தேதி ஒரு தனியார் கிளப்பில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய 17 வயது சிறுமியை 5 பேர் அழைத்து சென்று, காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் 5 பேரில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மற்ற இரு பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மைனர் சிறுவர்கள் ஈடுபட்டு இருந்தது கடந்த ஞாயிற்று கிழமை தெரிய வந்துள்ளது.

அதில் ஒரு வழக்கில், ஷேக் கலீம் அலி என்ற கலீம் என்ற வாடகை கார் ஓட்டுனர், ஷாகீன் நகருக்கு செல்ல வேண்டும் என கூறிய சிறுமியை அழைத்து சென்றுள்ளார். சிறுமியிடம் பணம் இல்லை. வழியில் இரவு 10 மணியளவில், மற்றொரு குற்றவாளியான முகமது லுக்மன் அகமது யஜ்தனி என்ற லுக்மன் காரில் ஏறியுள்ளார்.

இருவரும் கொன்துர்க் கிராமத்தில் உள்ள லுக்மன் வீட்டுக்கு சிறுமியை கொண்டு சென்றனர். கலீம் மற்றும் லுக்மன் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.

ஞாயிறன்று பதிவான மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் குற்றவாளி முகமது சுபியான் என்ற 21 வயது வாலிபர் ஆவார். பாதிக்கப்பட்ட பெண் வயிற்று வலி என தாயாரிடம் கூறிய பின்பு விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சார்மினார் பகுதியில் கடையில் வேலை செய்து வந்த அந்த சிறுமியை சுபியான் மே 31ந்தேதி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மைனர் சிறுவர்களுடன் தொடர்புடைய 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள் திங்கட்கிழமை (நேற்று) பதிவாகி உள்ளன. இதில் முதல் வழக்கில், 17 வயது சிறுமியை 23 வயது நபர் கவர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுபற்றி ராம்கோபால்பேட்டை காவல் நிலையத்தில் புகாரானது. மற்றொரு சம்பவத்தில் மைனர் சிறுவன் ஒரு மாதத்திற்கு முன் தியேட்டரில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த வழக்கு ராஜேந்தர் நகர் காவல் நிலையத்தில் பதிவானது.

இதுபற்றி தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெலுங்கானா டி.ஜி.பி.க்கு எழுதிய கடிதத்தில், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் டி.ஜி.பி. நேரடியாக தலையிட்டு, தெலுங்கானாவில் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தெலுங்கானா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதனால் வருங்காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் அவர்களுக்கு நடைபெறாத வகையில் தடுக்கப்படும் என அதில் தெரிவித்து உள்ளார். இந்த கடிதத்தின் நகல் ஒன்று ஐதராபாத் நகர காவல் ஆணையருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்