நாட்டில் 48 லட்சம் பேருக்கு பார்வையிழப்பு..! - கண் தானம், கண் வங்கி ! - வெளியான அதிர்ச்சித் தகவல்

குறிப்பிட்ட வடகிழக்கு மாநிலங்களின் கண்தான, கண் வங்கிகளின் செயல்பாட்டை விரிவுபடுத்த மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2022-10-11 18:04 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் 48 லட்சம் பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது, 2015 முதல் 2019வரை மேற்கொள்ளப்பட்ட, தேசிய பார்வையிழப்பு கணக்கெடுப்பு. இதில், கருவிழி பாதிப்பு காரணமாக உன்டான பார்வையிழப்பு, இரண்டாம் இடத்தில் உள்ளது.

நாட்டின் பார்வையிழப்பில் 7.4% கருவிழி பாதிப்பு என்கிறது, இந்தக் கணக்கெடுப்பு. கொரோனா காலத்தில் கண் தானம், கண் வங்கிகளின் செயல்பாடு குறித்த தகவல் அரியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோவா, ஜம்மு - காஷ்மீர், சில வடகிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், கண் தானம், கருவிழி மாற்று சிகிச்சை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. கடந்த ஆண்டு ஜூலை நிலவரப்படி, இந்த மாநிலங்களில் கருவிழி தானம், மாற்று சிகிச்சை ஆகியன இல்லவே இல்லை என்கிற அளவுக்கே, செயல்பாடு இருந்துள்ளது.

2016ஆம் ஆண்டிலிருந்தே இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கண் தானத்தில் பின்தங்கியுள்ளன. கருவிழிப் படலத்தை மாற்றி பார்வையை மீட்கும் அறுவை சிகிச்சையானது, 2016-17 ஆம் ஆண்டில் 30ஆயிரத்து 740ஆக இருந்த நிலையில், கொரனோ காலத்தில் 2021 - 22 ஆம் ஆண்டில் 24 ஆயிரத்து 783 ஆகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொதுவாக, கருவிழிப் படல மாற்று அறுவைசிகிச்சையில், சேதமடைந்த கருவிழிப் படலத் திசுக்களை அகற்றி ஆரோக்கியமான திசுவை வைக்கும் செயல்முறை ஆகும். இறந்துபோன மனிதர்களிடமிருந்து ஆரோக்கியமான கருவிழித் திசுக்களைப் பெற்று, உரியவர்களுக்கு பொருத்தப்படுகிறது.

கருவிழி மாற்று அறுவை, கண் வங்கிகளின் செயல்பாட்டில், உத்தரப்பிரதேசம் 41 , கர்நாடகா 32 , குஜராத் 25 , தமிழ்நாடு 20 , ஆந்திரா 19 என்கிற அளவில் முன்னணியில் இருக்கின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட வடகிழக்கு மாநிலங்களின் கண்தான, கண் வங்கிகளின் செயல்பாட்டை விரிவுபடுத்த மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்