மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இம்பால்,
மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்புபடை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் சுராசந்த்பூர் மாவட்டத்தில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கண்ணீர் புகை குண்டு வீச்சு
இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒருவர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் தன்னார்வலர்கள் என்றும் எதிர் தரப்பினரிடம் இருந்து தங்கள் கிராமத்தை பாதுகாத்து வந்தனர் என்றும் கூறி கிராம மக்கள் அவர்களது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.
அவர்கள் சாலைகளில் டயர்கள் மற்றும் மரக்கட்டைகளை தீயிட்டு எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்களை கலைந்துபோக செய்ய போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
முழு அடைப்பு போராட்டம்
இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி 5-க்கும் மேற்பட்ட அமைப்புகள் 48 மணி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் இரவில் இருந்து முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. கடைகள், வணிக வளாகங்கள், பெரும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வணிகங்களும் மூடப்பட்டன. இதனால் மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பத்தில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
இதனிடையே போலீஸ் சீருடையை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துவோர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.