என்ஜினீயரிங் மாணவரை கடத்தி கொன்ற வழக்கில் பெண்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி; கீழ்கோர்ட்டு தீர்ப்பு செல்லும் என ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூருவில் என்ஜினீயரிங் மாணவர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் பெண்கள் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிடடுள்ளது.
பெங்களூரு:
என்ஜினீயரிங் மாணவர் கொலை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் துஷார். இவர், பெங்களூருவில் தங்கி இருந்து என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி துஷார் மாயமானார். பின்னர் ஒரு வாரம் கழித்து சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நீலகிரி தோட்டத்தில் துஷார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் துஷாரை கொலை செய்ததாக, அவரது நண்பர்களான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரோகித்குமார், மும்பையை சேர்ந்த சிவானி தாக்கூர், ப்ரீத்தி ராஜ், வாரீஸ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்திருந்தனர். வாரீசும், துஷாரும் முதலில் ராஜஸ்தானில் படித்துள்ளனர். பின்னர் மேல் படிப்புக்காக துஷார் பெங்களூருவுக்கு வந்திருந்தார்.
ஆயுள் தண்டனை
துஷார் குடும்பத்தினர் வசதிப்படைத்தவர்கள் என்பதால், துஷாரை கடத்தி பணம் பறிக்க வாரீஸ், சிவானி, ப்ரீத்தி, ரோகித்குமார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த 2011-ம் ஆண்டு துஷாரை கடத்தி சென்று கொலை செய்திருந்தனர். இந்த வழக்கில் சோழதேவனஹள்ளி போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ந் தேதி துஷார் கொலை வழக்கில் பெங்களூரு செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறி இருந்தது.
அதன்படி, துஷாரை கொலை செய்த 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் 4 பேரும் மேல் முறையீடு செய்தனர். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
ஐகோர்ட்டு உறுதி செய்தது
இநத வழக்கு விசாரணை நிறைவு பெற்றதால் துஷார் கொலை வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். துஷாரிடம் பணம் பறிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அவரை 4 பேரும் கடத்தி இருந்ததுடன், கொலையும் செய்துள்ளனர். எனவே 4 பேருக்கும் பெங்களூரு கீழ் கோர்ட்டால் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.