உப்பள்ளி அருகே இருவேறு விபத்துகளில் புதுப்பெண் உள்பட 4 பேர் சாவு

உப்பள்ளி அருகே இருவேறு சாலை விபத்துகளில் புதுப்பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-06-27 16:49 GMT

உப்பள்ளி: உப்பள்ளி அருகே இருவேறு சாலை விபத்துகளில் புதுப்பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

3 பேர் சாவு

தார்வார் மாவட்டம் (தாலுகா) போகூரு கிராமத்தை சேர்ந்தவர்கள் சுஷிலவா ஹரிஜனா, கல்லவா ஹரிஜனா, ராஜூ. கூலி தொழிலாளிகள். நேற்று இவர்கள் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தார்வார் தாலுகா வெங்கடபுரா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும், தலை, கை, கால், முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் இது குறித்து தார்வார் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை தொடர்ந்து கார் டிரைவர் வாகனத்தைவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தார்வார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

புதுப்பெண் சாவு

இதேபோன்று உப்பள்ளி புறநகரில் விபத்து ஒன்று நடந்துள்ளது. உப்பள்ளி சிட்டி பகுதியை சேர்ந்தவர் பிரதிமா (வயது 28). இவர் நகரில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் மஞ்சுநாத் பட்டீல் (35). இவர் உப்பள்ளி கோர்ட்டில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் முடிந்தது. இந்நிலையில் நேற்று இருவரும் முமுறையாக உப்பள்ளி புறநகர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.உப்பள்ளி புறநகர் சரகத்திற்குட்பட்ட தட்ஸ்கிராசில் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பிரதிமா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மஞ்சுநாத்திற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், உப்பள்ளி புறநகர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த உப்பள்ளி புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்