ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாவு

விஜயநகர் அருகே, ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-11-02 19:49 GMT

விஜயநகர்:

ஏரிக்குள் விழுந்தனர்

விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி தாலுகா நந்திபேவூர் ஓனியை சேர்ந்தவர் அஸ்வினி (வயது 18). இவரது தம்பி அபிஷேக் (16). இதுபோல சன்னஹள்ளி ஓனியில் வசித்து வந்தவர் காவ்யா (19), தும்பினகேரி ஓனியை சேர்ந்தவள் அபூர்வா (14). இவர்கள் 4 பேரும் உறவினர் ஆவார்கள். இந்த நிலையில் ஹரப்பனஹள்ளி அருகே சன்னஹள்ளி தாண்டாவில் வசிக்கும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அஸ்வினி, அபிஷேக், காவ்யா, அபூர்வா ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு சன்னஹள்ளி தாண்டா கிராமத்தில் உள்ள ஒரு ஏரி நிரம்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் நிரம்பிய ஏரியை காண்பதற்காக அஸ்வினி, அபிஷேக், காவ்யா, அபூர்வா ஆகியோர் சென்று இருந்தனர். ஏரியின் கரையில் நின்று ஏரியை 4 பேரும் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 பேருக்கும் ஏரிக்குள் தவறி விழுந்தனர்.

2 பேரின் உடல்கள் மீட்பு

4 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 4 பேரும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர். இதுபற்றி அறிந்ததும் ஹரப்பனஹள்ளி போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் மூழ்கி இறந்த 4 பேரின் உடல்களை மீட்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

2 பேரின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்ட 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஹரப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சன்னஹள்ளி தாண்டா கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்