கணவரின் சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தில் 4 பேர் கொடூர கொலை; மனைவி, அவரது தந்தை கைது

கர்நாடகாவில் மரணம் அடைந்த கணவரின் சொத்துக்கு ஆசைப்பட்டு மாமனார் உள்பட 4 பேரை கொடூர கொலை செய்த மனைவி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2023-02-25 14:35 GMT


மங்களூரு,


கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் கார்வார் அருகே பட்கல் தாலுகா பகுதிக்கு உட்பட்ட ஒனிபகிலு ஹடவள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் ஷம்பு பட் (வயது 70). இவரது மனைவி மாதேவி பட் (வயது 60). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

அவர்களின் மூத்த மகன் பெயர் ஸ்ரீதர் பட். அவரது மனைவி வித்யா. மற்றொரு மகன் ராஜீவ் பட் (வயது 34), அவரது மனைவி குசுமா பட் (வயது 30).

இந்த நிலையில், மூத்த மகனான ஸ்ரீதர் பட் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார். இதனால், சொத்தில் ஒரு பங்கை தனக்கு தர வேண்டும் என அவரது மனைவி வித்யா, மாமனார் ஷம்பு பட்டிடம் கேட்டு உள்ளார்.

இதன்பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை மருமகள் வித்யாவுக்கு தர மாமனார் ஷம்பு ஒப்பு கொண்டு உள்ளார். ஆனால், அதில் வித்யாவுக்கு திருப்தி ஏற்படவில்லை.

இதனால், மாமனார் உள்பட குடும்பத்தினரை படுகொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். இந்நிலையில், ஷம்பு பட் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இருந்தனர். அப்போது, நேற்று மாலையில் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், ஷம்பு பட், அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரையும் படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

இதுபற்றி போலீசார் சிறப்பு படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவத்தின்போது, ராஜூவின் மகள் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்து உள்ளது. மகன் அண்டை வீட்டில் இருந்து உள்ளது. இதனால், அவர்கள் தப்பினர்.

இந்த சம்பவத்தில், போலீசார் வித்யாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரது தந்தையும் கைது செய்யப்பட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய வித்யாவின் சகோதரரான வினய் என்பவர் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

கணவரின் சொத்துக்காக ஆசைப்பட்டு, மாமனார் உள்பட ஒரே குடும்பத்தில் உள்ள 4 பேரை மருமகள் கொடூர கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்