பெங்களூருவில் கைதான பயங்கரவாதி வீட்டில் பதுக்கிய 4 கையெறி வெடிகுண்டுகள் சிக்கியதால் பரபரப்பு

பெங்களூருவில் கைதான பயங்கரவாதி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 கையெறி வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட வரைபடம் தயாரித்து வைத்திருந்ததும் அம்பலமாகி உள்ளது.

Update: 2023-07-20 21:17 GMT

பெங்களூரு:

தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபடுவதற்கு பயங்கரவாதிகள் தொடர்ந்து திட்டமிட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளால் பெங்களூருவுக்கு அச்சுறுத்தல் இருந்தும் வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் மூலமாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உஷாரான போலீசார் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கவும், பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்கவும் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, பெங்களூருவில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 18-ந் தேதி கைது செய்திருந்தார்கள்.

அவர்கள் பெயர் முகமது உமர் (வயது 29). சையத் சுகைல்கான் (24), சையத் முதாசிர் பாஷா (28), பைசல் ரப்பானி (30), ஜாகித் தப்ரேஜ் (25) என்பதாகும். இவர்கள் 5 பேரும், கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பில் கைதான நசீர் மற்றும் ஜுனைத்துடன் சேர்ந்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். நசீர் தற்போது கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜுனைத் சவுதி அரேபியாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

கைதான 5 பயங்கரவாதிகளிடம் இருந்தும் 7 கைத்துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், 12 செல்போன்கள், வாக்கி டாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. கைதான 5 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் மெஜஸ்டிக், பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

அதாவது நசீர், லஷ்கர்-இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் ஆவார். இவருக்கும் ஜுனைத்திற்கும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் வைத்து பழக்கம் ஏற்பட்டு பயங்கரவாத அமைப்பில் இணைந்திருந்தார். இதுபோல், கொலை வழக்கில் சிறைக்கு சென்றிருந்த போது தற்போது கைதான 5 பேரையும் ஜுனைத் மூளை சலவை செய்து நாசவேலையில் ஈடுபட தயார் செய்திருந்தார்.

கைதான 5 பேரையும் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. அதாவது பயங்கரவாதி ஜாகித் வீட்டில் கையெறி குண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கொடிகேஹள்ளியில் உள்ள ஜாகித் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அவரது வீட்டின் ஒரு அறையில் 4 கையெறி குண்டுகள் (கிரானைட்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கையெறி குண்டுகள் வெடிக்காமல் இருப்பதற்காக மிகுந்த பாதுகாப்புடன் ஜாவித் பதுக்கி வைத்திருந்தார். கடந்த 11-ந் தேதி பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் வைத்து ஒரு நபர் ஜாகித்திடம் பார்சலை கொடுத்துவிட்டு சென்றிருந்தார்.

அந்த பார்சலில் தான் கையெறி குண்டுகள் இருந்துள்ளது. அந்த நபர் யார்? என்பது பற்றி ஜாகித் தனக்கு தெரியாது என்று போலீசாரிடம் கூறியுள்ளார். அதே நேரத்தில் சவுதி அரேபியாவில் வசிப்பதாக கூறப்படும் ஜுனைத் தான் ஆன்லைன் பார்சல் மூலமாக அந்த கையெறி குண்டுகளை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதனை வாங்கி ஜாகித் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபடுவதற்காக 4 கையெறி குண்டுகளையும் கைதான 5 பயங்கரவாதிகளும் தயாராக வைத்துள்ளனர். எந்தெந்த இடங்களில் நாசவேலையில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து ஒரு வரைபடத்தையும் (மேப்) தயாரித்து வைத்திருந்தார்கள். தற்போது கைதாகி இருக்கும் 5 பேரும், நசீர் மற்றும் ஜுனைத்திற்கு கீழ் தான் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் 2 பேரும் அளிக்கும் உத்தரவின் பேரில் பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட 5 பேரும் தயாராக இருந்துள்ளனர். ஆனால் ஜுனைத்திடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வராமல் இருந்துள்ளது.

ஆனாலும் தங்களது சதித்திட்டத்தை கச்சிதமாக செயல்படுவதற்காக தான் ஆர்.டி.நகரில் உள்ள சுல்தான் பாளையாவில் கைதான 5 பேரும் கடந்த 1½ மாதத்திற்கு முன்பாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். அதற்கு முன்பாக போலீசார் திறமையாக செயல்பட்டு 5 பேரையும் பிடித்து விட்டதால், பெங்களூருவில் அரங்கேற்ற இருந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்து ஒருவாரம் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம். 5-வது குற்றவாளி அளித்த தகவல்களின் பேரில் 4 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த 4 குண்டுகளும் சக்தி வாய்ந்தது. வெடித்து சிதறும் தன்மையுடன் தான் இருந்தது. 5-வது குற்றவாளிக்கு தனது வீட்டில் தனியாக ஒரு அறை உள்ளது. அந்த அறையில் உள்ள லாக்கரில் தான் மிகவும் பாதுகாப்பாக அந்த கையெறி குண்டுகளை வைத்திருந்தார்.

அந்த கையெறி குண்டுகளில் எந்த மாதிரியான வெடிப்பொருட்கள் உள்ளது, அவற்றின் சக்தி உள்ளிட்டவை குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வுநடத்தி வருகின்றனர். ஒரு நபர், 5-வது குற்றவாளிக்கு கையெறி குண்டுகளை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அந்த நபர் குறித்து விசாரித்து வருகிறோம். அந்த கையெறி குண்டுகளை, எந்த நேரத்திலும் வெடிக்க செய்வதற்காக தயார் நிலையிலேயே வைத்திருந்தனர். கைதான 5 பேரிடமும் விசாரணை நடந்துவருவதால், தற்போது மற்ற தகவல்களை பகிரங்கப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்