ராஜாஜிநகரில் சாலையில் 4 அடிக்கு திடீர் பள்ளம்
பெங்களூரு ராஜாஜிநகர் அருகே பசவேஸ்வரா நகரில் சாலையில் 4 அடிக்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ராஜாஜிநகர்:
திடீர் பள்ளங்கள்
பெங்களூருவில் மாநகராட்சியின் கீழ் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெங்களுருவில் உள்ள சாலைகளில் அடிக்கடி திடீர் பள்ளங்கள் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைவதும், சில நேரங்களில் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.
கடந்த வாரம் அசோக் நகர் பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மோட்டார் சைக்கிளில் தவறிவிழுந்து வாலிபர் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் ராஜாஜிநகர் தொகுதிக்கு உட்பட்ட பசவேஸ்வரா நகர் 100-வது வார்டில் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியின் அருகே உள்ள சாலையில் நேற்று முன்தினம் திடீரென 4 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை.
சீரமைப்பு
இதுகுறித்து அந்த பகுதியினர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில் பள்ளி உள்ளதால், மாணவர்கள் தவறி விழுவதை தடுக்க அந்த பகுதியினர் சிமெண்டு கற்கள், சைக்கிள் டயர்கள் போன்றவற்றை பள்ளத்தில் போட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். அவர்கள் வருவதற்குள் 4 அடிக்கு இருந்த பள்ளம் 7 அடிக்கும் அதிகமானது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டு பள்ளம் சீரமைக்கப்பட்டது. பெங்களூரு சாலைகள் அடிக்கடி இதுபோன்று பள்ளங்கள் ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.