3வது முறை மது கேட்டு தொந்தரவு... கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை

சுனிலிடம் சென்று தனக்கும், தனது நண்பர்களுக்கும் மதுபானம் வாங்கி கொடுக்கும்படி குமாரசாமி கேட்டுள்ளார்.;

Update:2024-02-07 01:35 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்தவர் சுனில். கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காலையில் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்துக்கு சொந்தமான பள்ளியில் படிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குழந்தைகளை பார்த்து நலம் விசாரிக்க சென்றுள்ளார். இதையடுத்து சுனில் மது குடிப்பதற்காக கியாத்தசந்திராவில் உள்ள மதுபான கடைக்கு சென்றார்.

அப்போது அங்கு விஜயநகர் மாவட்டம் கூடலகியை சேர்ந்த குமாரசாமி (வயது 28) என்பவர் தனது நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், சுனிலிடம் அதிக பணம் இருப்பதை குமாரசாமி கவனித்தார். பின்னர் சுனிலிடம் சென்று தனக்கும், தனது நண்பர்களுக்கும் மதுபானம் வாங்கி கொடுக்கும்படி குமாரசாமி கேட்டுள்ளார். அப்போது சுனிலும் அவர்களுக்கு மதுபானம் வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து மது குடித்துவிட்டு அவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் அன்றைய தினம் மாலையில் சுனில் மீண்டும் அதே மதுபான கடைக்கு மது குடிக்க வந்துள்ளார். அப்போதும், குமாரசாமி தனது நண்பர்களுடன் அங்கு மது குடித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சுனிலை பார்த்ததும் குமாரசாமி மீண்டும் மதுபானம் வாங்கி கொடுக்கும்படி கேட்டுள்ளார். அவரும் மதுபானம் வாங்கி கொடுத்துள்ளார்.

இதையடுத்து மீண்டும் குமாரசாமி, சுனிலிடம் மதுபானமும், சிறிதளவு பணமும் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், குமாரசாமியை அந்தப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து குமாரசாமியை அவர் சரமாரியாக தாக்கினார். மேலும் கல்லால் முகம், தலையில் சரமாரியாக தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சுனில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கியாத்தசந்திரா போலீசார் விரைந்து வந்து குமாரசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார், தப்பி ஓடிய சுனிலை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்