மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு: "நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை"- காங்கிரஸ் விமர்சனம்

மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவால் நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

Update: 2023-09-19 13:20 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.

அதேபோல, மாநிலங்களவையில் வியாழக்கிழமை அன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதால், மசோதா நிறைவேறுவது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவால் நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவால் நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை. ஏனெனில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகுதான் இந்த மசோதா அமலுக்கு வரும்.

2021ம் ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படாமலேயே உள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 அல்லது 2028ல் தான் நடைபெறும் என வெறும் தகவலாக சொல்லப்படுகிறது.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகே தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, அதன் பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் சூழல் உள்ளது. மோடி அரசு நம் நாட்டு பெண்களை ஏமாற்றியதோடு அவர்களின் நம்பிக்கையையும் சிதைத்துள்ளது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்