சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் மங்களூருவை சோ்ந்த 3 பேர் பலி

சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் மங்களூருவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதனால் அவரது உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

Update: 2023-02-05 18:45 GMT

மங்களூரு:

மங்களூருவை சேர்ந்த 3 பேர் சாவு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர்கள் அகில், ரிஸ்வான், ஷிஹாப். இவர்கள் சவுதி அரேபியாவின் ரியாத் மாகாணத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நள்ளிரவு வேலை முடிந்ததும் அவர்கள் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த நசீர் ஆகிய 4 பேரும் காரில் தாங்கள் தங்கிருந்த இடத்துக்கு சென்றனர்.

அப்போது குரைஸ் சாலை அருகே சென்றபோது, திடீரென்று காரின் குறுக்கே ஒட்டகம் ஒன்று வந்துள்ளது. இந்த ஒட்டகம் மீது மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மங்களூருவை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சோகம்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த மாகாண போலீசார், பலியான 4 பேரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பலியான மங்களூருவை சேர்ந்த 3 பேரின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், கதறி அழுதனர். மேலும் 3 பேர் வசித்த பகுதிகள் சோகமயமாக மாறியது.

சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் பலியான மங்களூருவை சேர்ந்த 3 பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்