பத்ரா அணையில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலி

பத்ராவதியில் உள்ள பத்ரா அணையில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் இறந்தனர். விடுமுறைக்கு உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-05-22 18:45 GMT

சிவமொக்கா-

பத்ராவதியில் உள்ள பத்ரா அணையில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் இறந்தனர். விடுமுறைக்கு உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

பத்ரா அணை

சிக்ககமளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லக்குவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 39). இவரது வீட்டிற்கு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் இருந்து தனது அக்காள் மகள் சாமவேணி (வயது 16), சிவமொக்காவில் இருந்து அனன்யா (17) ஆகியோர் வந்தனர். கல்லூரிக்கு விடுமுறை என்பதால் அவர்கள் உறவினராக ரவி வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் ரவி தனது உறவினர்களான சாமவேணி மற்றும் அனன்யாவுடன் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள பத்ரா அணையை சுற்றி பார்க்க அழைத்து சென்றனர்.

அங்கு அனன்யா, சாமவேணி ஆகியோர் அணையை சுற்றி பார்த்து கொண்டு இருந்தனர். பின்னர் அணையின் அருகே 2 பேரும் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அனன்யா அணையில் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற சாமவேணி அணையில் குதித்தார். அப்போது அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

3 பேர் சாவு

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி அனன்யா, சாமவேணி ஆகியோரை காப்பாற்ற அணையில் குதித்தார். இதில் அவரும் தண்ணீரில் சிக்கி தத்தளித்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் லக்குவள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பத்ரா அணையில் மூழ்கிய 3 பேரையும் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. பின்னர் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் 3 பேரையும் தீயணைப்பு படையினர் பிணமாக மீட்டனர். தண்ணீரில் மூழ்கி அவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லக்குவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்