போலி வாக்காளர் அட்டைகள் தயாரித்து விற்பனை; கர்நாடக மந்திரி பைரதி சுரேசின் ஆதரவாளர் உள்பட 3 பேர் கைது

போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்து விற்பனை செய்ததாக மந்திரி பைரதி சுரேசின் ஆதரவாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-21 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்குவதற்கு அவற்றை சட்டவிரோதமாக வாங்கி வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே வெளிநாட்டினர் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் போலி ஆவணங்கள் தயாரித்து கொடுக்கும் நபர்கள் குறித்து குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு ஹெப்பால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கனகநகர் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் போலி வாக்காளர் அட்டை உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த நிறுவனம் ஒன்றில் போலி அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டது உறுதியானது.

இதையடுத்து அங்கிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் இதுதொடர்பாக ஹெப்பால் போலீசில் புகார் அளித்தனர். மேலும் கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் மவுனேஷ், ராகவேந்திரா மற்றும் பகத் ஆகிய 3 பேர் என்பதும், இதில் மவுனேஷ் பெங்களூரு அருகே உள்ள ஹெப்பால் தொகுதி எம்.எல்.ஏ.வும், கர்நாடக நகரவளர்ச்சித் துறை மந்திரியுமான பைரதி சுரேசின் ஆதரவாளர் என்பதும், ராகவேந்திரா மற்றும் பகவத் ஆகியோர் அவரது நண்பர்கள் என்பதும் தெரிந்தது.

அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக போலி ஆதார், வாக்காளர் உள்ளிட்ட அடையாள அட்டைகளை தயாரித்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே போலி வாக்காளர் அட்டைகள் தயாரிப்பில், மந்திரியின் நண்பர்கள் சிக்கி உள்ளது குறித்து போலீஸ் மந்திரி ஜி. பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், போலி அடையாள அட்டைகள் கைப்பற்றிய விவகாரம் குறித்து எனது கவனத்திற்கு இதுவரை வரவில்லை.

எனவே அதுகுறித்து எனக்கு தற்போது எதுவும் தெரியாது. எனினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் சதீஷ் ஜார்கிகோளி தனிப்பிரிவு கிடையாது. காங்கிரஸ் என்பதே ஒரு தனிப்பிரிவு என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்