பெங்களூருவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத்தினர் 3 பேர் கைது- என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை

பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2023-08-08 18:45 GMT

பெங்களூரு:-

சட்டவிரோதமாக...

பெங்களூருவில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் பலர் தங்கி உள்ளனர். அவர்கள் போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த கலில் சபரசி, அப்துல் காதிர் மற்றும் முகமது ஷாகித் ஆகியோர் என்பதும், அவர்கள் போலி ஆதார் உள்ளிட்ட பல்வேறு அரசு அடையாள அட்டைகளை பயன்படுத்தி பெங்களூருவில் வசித்து வந்ததும் தெரிந்தது.

தீவிர விசாரணை

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெல்லந்தூர் போலீசில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்தது தெரிந்தது.

அவர்களது குற்றப்பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பெங்களூருவில் ஒட்டுமொத்தமாக வங்கதேசத்தை சேர்ந்த 3 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட இருந்த 5 பயங்கரவாதிகள் கைதான நிலையில் தற்போது 3 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்