சிறுமிகள் பலாத்கார வழக்கில் வாலிபர் உள்பட 2 பேருக்கு தலா 25 ஆண்டு சிறை- கதக் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிகள் பலாத்கார வழக்கில் வாலிபர் உள்பட 2 பேருக்கு தலா 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து கதக் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2022-10-08 18:45 GMT

கதக்:

சிறுமி பலாத்காரம்

கதக் டவுன் பேடகேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் கோவிலுக்கு சென்ற சிறுமியை வெங்கடேஷ் வழிமறித்து, கடத்தி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலத்காரம் செய்தார்.

மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர் சிறுமியை மிரட்டி உள்ளார். ஆனாலும் நடந்த சம்பவத்தை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள். இதுகுறித்த புகாரின்பேரில் பேடகேரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போக்சோவில் கைது

இதேபோல் பேடகேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகசமுத்ரா கிராமத்தை சேர்ந்த சிறுமியை அதேப்பகுதியை சேர்ந்த மல்லய்யா என்ற வாலிபர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பேடகேரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து மல்லய்யாவை கைது செய்தனர்.

இந்த 2 வழக்குகள் தொடர்பாக பேடகேரி போலீசார் கதக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை கதக் கோர்ட்டில் நடந்து வந்தது.

தலா 25 ஆண்டுகள் சிறை

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது வெங்கடேஷ், மல்லய்யா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் 2 பேரும் தலா 25 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்