சிவமொக்கா கலவரம் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு; போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமாா் பேட்டி

சிவமொக்கா கலவரம் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், கைது எண்ணிக்கை 60 ஆக உயர்ந்திருப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தெரிவித்தார்.

Update: 2023-10-03 18:45 GMT

சிவமொக்கா:

சிவமொக்கா நகரில் கடந்த 1-ந்தேதி சாந்திநகர், ராகிகுட்டா, காந்திபஜார், அமீர் அகமது ரோடு உள்பட பல இடங்களில் மீலாது நபி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதைெயாட்டி சாந்திநகரை அடுத்த ராகிகுட்டாவில் திப்பு சுல்தான் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதில் சர்ச்சைக்குரிய வாசகம் எழுதப்பட்டிருந்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து அந்த வாசகம் அழிக்கப்பட்டது.

பின்னர் அன்றைய தினம் மாலை மீலாது நபி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது திடீரென்று கலவரம் ஏற்பட்டது. வீடுகள், வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனைதொடர்ந்து பதற்றம் நிலவியதால் சிவமொக்காவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக நேற்று வரை 60 பேர் கைது செய்யப்பட்டனர். ேமலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காந்தி பஜார், நேரு சாலையில் இருந்த கடைகள் திறக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. சந்தேகப்படும்படியாக நடமாடும் நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து அனுப்பி வைத்து வருகின்றனர். தற்போது சிவமொக்காவில் இயல்புநிலை திரும்பியுள்ளது. எனினும் தொடர்ந்து 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 4 பேர் கும்பலாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவமொக்கா போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சிவமொக்கா கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அது சிவமொக்கா கலவரம் தொடர்பான வீடியோ இல்லை. வேறு இடங்களில் நடந்த கலவரம் தொடர்பான வீடியோ. இந்த வீடியோக்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்.

அதேபோல 2 காரில் வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று வைரலானது. அந்த கார் நியாமதியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது. அந்த காரில் இரு தரப்பினரும் இருந்தனர். மீலாது நபி ஊர்வலத்தை பார்க்க வந்தபோது, கலவரத்தில் சிக்கி கொண்டனர். அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இல்லை.

இந்த கலவரம் தொடர்பாக 24 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிவமொக்காவில் அமைதி திரும்பி உள்ளது. எனினும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றார்.

இந்தநிலையில் மாவட்ட பொறுப்பு மந்திரி மதுபங்காரப்பா நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து மதுபங்காரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராகிகுட்டாவில் நடந்தது இரு தரப்பினரிடையேயான கலவரம் இல்லை. விஷமிகள் சிலர் இந்த கலவரத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த கலவரம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம். இந்த கலவரத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவமொக்காவில் தற்போது அமைதி திரும்பி உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கலவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்