நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்? விவரங்களை வெளியிட்டது தேர்தல் கமிஷன்
இந்தியாவில் 1951-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்தது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
இதில் முக்கியமாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது. அதன்படி நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதில் 47 கோடி பேர் பெண்கள் ஆவர். மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக்கு மேற்பட்டோர் 18-19 வயது பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 18 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 91.20 கோடி ஆகும்.
அதேநேரம் இந்தியாவில் 1951-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்தது. இது 1957-ல் 19.37 ஆக அதிகரித்து இருந்தது.வருகிற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.அத்துடன் 1.5 கோடிக்கு அதிகமான பணியாளர்கள் வாக்குப்பதிவுக்காக பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.