ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல - அசாதுதீன் ஓவைசி

ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-16 21:27 GMT
லக்னோ,

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன்  கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 3-ம் நாட்களாக மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது. இந்த ஆய்வு பணியின் போது இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஞானவாபி மசூதி பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. அந்த பகுதிக்குள் ஆட்கள் நுழைய தடைவிதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையில், ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், ஞானவாபி மசூதிக்குள் உள்ளது சிவலிங்கம் அல்ல என்று அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓவைசி கூறுகையில், ஞானவாபி மசூதிக்குள் உள்ளது செயற்கை நீரூற்று அமைப்பு. அது சிவலிங்கம் அல்ல. அனைத்து மசூதியிலும் செயற்கை நீரூற்று அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள கமிஷன் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறாதது ஏன்?. அந்த இடத்திற்கு சீல் வைப்பது 1991 சட்டத்தின்படி விதிமீறலாகும்’ என்றார். 

மேலும் செய்திகள்